இலங்கையின் ஒட்டுமொத்த வெளிநாட்டுக் கடனான 51 பில்லியன் டொலர்களுக்கும் அதிகாமான தொகையில் சீனாவுக்கு 12சதவீதம் நிலுவை காணப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தான், இலங்கையில் சக்திவளத்துறைக்குள் சீனா பிரவேசித்திருக்கின்றது.
இந்த நிலைமையானது, இலங்கை ஒட்டுமொத்தமாக சீனாவின் பிடிக்குள் சென்றுவிடும் என்ற அச்சமான சூழலை தோற்றுவித்திருக்கின்றது. இதனால் இறைமையுள்ள இலங்கையின் எதிர்காலம் எவ்வாறு அமையப்போகின்றது என்பது தொடர்பில் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
முன்னதாக கடந்த மாதம், மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளர் எம்.பி.டி. யூ.கே. மாபா பதிரனவும் சினோபெக் நிறுவன எரிபொருள் உற்பத்தி மற்றும் விநியோக திணைக்கள முகாமைத்துவப் பணிப்பாளர் சென் சென்க்மிம் ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு முன்னால் ஒப்பந்த்தில் கைச்சாத்திட்டனர்.
அந்த ஒப்பந்த்தின் பிரகாரம், சினோபெக் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் இலங்கையில் தமது பெற்றோலிய விநியோகச் செயற்பாட்டில் களமிறங்கவுள்ளன. முதற்கட்டமாக நவீன எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைப்பதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் குறித்த அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டு 45 நாட்களுக்குள் செயற்படத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சினோபெக் வருகையின் மூலம் நிலையான மற்றும் நம்பகமான எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வதோடு நாட்டின் வலுசக்தித் துறையை மேம்படுத்துவதற்கும் பங்களிக்கும் என்றும் இலங்கை எதிர்பார்கின்றது.சினோபெக் நிறுவனமானது, சீனாவின் மிகப்பெரிய உற்பத்தியாளராகவும் மற்றும் பெற்றோலிய பொருட்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலிய பொருட்களை விநியோகிக்கும் செயற்பாடுகள் ஈடுபடுகின்றது.
இது சீனாவின் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல பகுதிகளில் செயற்படும் ஒருங்கிணைந்த எண்ணெய் நிறுவனமாகும். எண்ணெய் ஆய்வு முதல் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களின் விற்பனை வரை, எரிபொருள் போக்குவரத்து முதல் இறக்குமதி-ஏற்றுமதி நடவடிக்கைகள் வரை அனைத்திலும் தாக்கத்தினைச் செலுத்துவதாகும்.
சினோபெக் சீன மற்றும் சர்வதேச பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ளது, ஆனால் அது சீன அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்பட்டு நிதியளிக்கப்படுகிறது. இந்த நிறுவனம் தனது உற்பத்தியை அதிகரிக்க வடிவமைக்கப்பட்ட ஐந்து ஆய்வு மற்றும் உற்பத்தி திட்டங்களை உருவாக்கி வருகிறது.
ஷெங்லி எண்ணெய் வயல், டாரிம் படுகை, ஓர்டோஸ் படுகை, சிச்சுவான் படுகை, மற்றும் வழக்கத்திற்கு மாறான எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பு ஆகியவை இந்தத் திட்டங்களாகும்.இந்தப் பின்னணியைக் கொண்டுள்ள சினோபெக் நிறுவனம் இலங்கையுடன் ஒப்பந்தத்தில் கைசத்திட்டவுடன் சர்ச்சையொன்று வெடித்திருந்தது.
அதாவது இலங்கையில், எரிபொருள் விற்பனை செய்வதற்கு சினோபெக் நிறுவனம் வேறு வெளி நிறுவனங்களை பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. எனினும் இந்தத் தகவல்களை நிராகரித்துள்ள சீனாவின் சினோபெக் நிறுவனம் தமது வணிகத்திற்காக மூன்றாம் தரப்பினரை தொடர்பு கொள்ளவில்லை என்று குறிப்பிட்டது.
அத்துடன், தமது எரிவாயு நிலையங்களுக்கான சேவை உரிமைகளை வேறு எந்த தரப்பினருக்கும் மாற்ற விரும்பவில்லை என்றும், தனது வர்த்தக நாமத்தின் நற்பெயரைப் பாதுகாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் சினோபெக் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆனால், நெருப்பின்றி புகைவராது என்ற கூற்றுக்கு அமைவாக, சினோபெக் நிறுவனத்தின் பிறநாடுகளில் முன்னெடுக்கும் செயற்பாடுகள் பற்றிய பூரணமான ஆய்வு இங்கு அவசியமாகின்றது.
அதுவொருபுறமிருக்கையில், பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள இலங்கையானது, அதிலிருந்து மீள்வதற்கு போராடி வருகின்றது. இந்தப் போராட்டத்தில் சர்வதேச நாணய நிதியம் 2.9பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு முன்வந்துள்ளது.அதன் முதற்கட்டம் வழங்கப்பட்ட நிலையில் இரண்டாவது கட்டத்திற்காக கடன்மறுசீரமைப்பு உள்ளிட்ட விடயங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
ஆனால் கடன் மறுசீரமைப்பு விடயத்தில் சீனாவின் வகிபாகம் மிகவும் பின்னடைவான நிலையில் தான் உள்ளது.இவ்வாறான நிலையில், எரிபொருள் விநியோகத்தில் சீனா பிரவேசிப்பதானது, எதிர்காலத்தில் ஒட்டுமொத்த நாட்டையும் கட்டப்படுத்துவதற்கான நிலைமைகளை உருவாக்கி விடுவதற்கான அச்சமான சூழல்களும் காணப்படுகின்றன.
இலங்கை முழுவதும் சுமார் 211 எரிபொருள் நிரப்பு நிலையங்களை இந்தியாவுக்குச் சொந்தமான லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் செயற்படுத்தி வருகின்றது. எனினும், சீனோபெக் ஒப்பந்த்தின் ஊடாக முதற்தடவையில் 150வரையிலான எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை இரண்டாம், மூன்றாம் கட்டங்களில் அதிகரிக்கின்றபோது, இலங்கைக்கான எரிபொருள் விநியோகத்தில் சீனா பிரதான இடத்தினை வகிக்கலாம். அவ்வாறானதொரு சூழல் ஏற்படுகின்றபோது நாட்டின் இயக்கத்தையே கட்டுப்படுத்தல்ல சக்தியை சீனா பெற்றுவிடும்.
இது, சீனாவின் மூலோபாய நடவடிக்கைகள் அனைத்துக்கும் இலங்கை தலையசைத்துச் செல்ல வேண்டிய நிலைமையை உருவாக்கும் நிலைமைகளையே ஏற்படுத்தும்.
இதனைவிடவும், சீனா, சீனா நஷனல் எனர்ஜி இன்ஜினியரிங் அண்ட் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி லிமிடெட் ஊடாக இலங்கையில் 400மெஹாவோல்;ட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்காக 800 மில்லியன் டொலர்களை முதலீடு செய்வதற்கு தயாராகியுள்ளது.
ஏற்கனவே சூழலுக்கு ஆபத்துக்களை ஏற்படுத்தவல்ல, நிலக்கரியின் ஊடாக மின்சாரத்தினை உற்பத்தியில் சீனாவின் பங்களிப்பு காணப்படுகின்றது.
300மெஹாவோல் பெறுமதியான மூன்று இயந்திரங்களைக் கொண்ட நுரைச்சோலை மின் உற்பத்தி நிலைமானது சீனாவிடம் இருந்து பெறப்பட்ட 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனில் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.