இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் மேற்கொண்டதை போன்று அணுமின் நிலையத்தில் முதலீடு செய்வதற்கான ரஷ்யாவின் முன்மொழிவை முன்னெடுத்து செல்வது குறித்து அரசாங்கம் இதுவரை இறுதி நிலைப்பாட்டை எட்டவில்லை என மின்சக்தி எரிசக்தி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அணுசக்தி நிறுவனமான ரோசாட்டம், இரண்டு அணு உலைகளை இயக்கி 300 மெகாவாட் ஆற்றலை உற்பத்தி செய்யும் அணுமின் நிலையத்தை உருவாக்க முன்வந்துள்ளது.
ரொசாட்டம் நிறுவனத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது, அணுசக்தி துறையில் முதலீடு செய்வதற்கான இந்த திட்டத்தை பரிசீலிக்க இலங்கை ஒப்புக்கொள்வதாக, ரஷ்யாவிற்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் ஜனிதா லியனகே தெரிவித்திருந்தார்.
இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மின்சக்தி எரிசக்தி அமைச்சின் செயலாளர் மாபா பத்திரன, அணுமின் நிலையம் குறித்து முடிவெடுப்பதற்கு முன்னர் பல விடயங்களை கவனத்திற்கொள்ள வேண்டும் என்பதனால் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என கூறியுள்ளார்.
குறிப்பாக பாதுகாப்பு அம்சங்களை கவனத்திற்கொள்ள வேண்டும் என்றும் அத்தோடு அணுசக்தி தொடர்பான சர்வதேச மாநாடுகளை ஆராய வேண்டும் என்பதனால் அரசாங்கம் எந்த இறுதி நிலைப்பாட்டையும் எட்டவில்லை என்றும் மாபா பத்திரன குறிப்பிட்டுள்ளார்.