விடுதலைப்புலிகளை மீளுருவாக்குவதற்காக ஆயுதங்கள் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட 3 இந்திய மற்றும் 10 இலங்கையர்கள் உட்பட 13 பேருக்கு எதிராக இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இந்தியாவிலும் இலங்கையிலும் சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தைப் பயன்படுத்தி, பணத்தை பெற்றுக்கொண்டு விடுதலைப் புலிகளை புத்துயுர் அளிப்பதற்காக ஆயுதங்களை வாங்குவதற்காக அவர்கள் திட்டமிட்டதாக என்ஐஏ குற்றம் சுமத்தியுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம், 1967 ஆம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் மற்றும் போதைப்பொருள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் கடந்த வியாழக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் எம். செல்வகுமார் , விக்கி என்ற விக்னேஷ்வர பெருமாள் மற்றும் ஐயப்பன் நந்து ஆகிய 3 இந்தியர்களுக்கு எதிராகவும் குணா, புஷ்பராஜா, மொஹமட் அஸ்மின், சுனில் காமினி பொன்சேகா, ஸ்டான்லி கென்னடி பெர்னாண்டோ, தனுக்க ரொஷான், நளின் சத்துரங்க, கமகே சுரங்க பிரதீப், திலீபன் மற்றும் தனரத்தினம் நிலுக்ஷன் ஆகியோருக்கு எதிராகவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது
குற்றச்செயல்கள் மூலம் கிடைக்கும் பணத்தை பயன்படுத்தி அவர்கள் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்துள்ளனர் எனவும் இவர்களிடம் இருந்து போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பிலான பல ஆவணங்கள், பெருமளவு பணமும் தங்கப்பாளங்களும் கைப்பற்றப்பட்டதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.