சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சட்டத்தின் தொடர்ச்சியான துஷ்பிரயோகம் குறித்து சிவில் சமூகப் பிரதிநிதிகள் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ளனர்.
மேலும் அச்சட்டத்தின் முறையற்ற பயன்பாட்டை உடனடியாக நிறுத்தவும், துஷ்பிரயோகம் செய்யப் படுவதைத் தடுப்பதற்கு அவசியமான மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளன.
மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்குமென உருவாக்கப்பட்ட இச்சட்டத்தை அரசியல் செயற்பாட்டாளர்கள், மனித உரிமைகள் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் சட்டத்தரணிகளை மௌனிக்கச் செய்வதற்கும், தண்டிப்பதற்கும் அரசாங்கம் பயன்படுத்திவருவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
அண்மைய காலங்களில் இலங்கையினால் இச்சட்டம் பிரயோகிக்கப்படும் முறை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மீளாய்வுக்குழு அதன் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ளமையையும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் சூட்டிங்க்தியுள்ளனர்.
இச்சட்டத்தின் தவறான பயன்பாடு, அச்சட்டத்தின் ஊடாக இலக்குவைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படும் தரப்பினருக்கு மாத்திரமன்றி, தற்போதைய அரசியல், பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான நாட்டின் முயற்சிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.
தேசிய ரீதியான அல்லது இன, மதரீதியான வெறுப்பைத் தூண்டுவதை கருத்துச் சுதந்திரத்தை நசுக்குவதற்கான ஆயுதமாக இலங்கை அரசாங்கம் தொடர்ந்து பயன்படுத்திவருகின்றமை தொடர்பாகவும் அவர்கள் தீவிர கரிசனை வெளியிட்டுள்ளனர்.