தாய் அடித்ததால் 5 ஆவது மாடியில் இருந்து சிறுவன் ஒருவன் குதித்த சம்பவம் சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் கிழக்கு சீனாவில் உள்ள அன்ஹுய் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தின் வீடியோவானது தற்போது வெளியாகி பெரும் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த வீடியோவில் வீடியோவை பதிவு செய்த நபரும், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களும், ‘சிறுவனை அடிக்க வேண்டாம்’ என்று அத் தாயிடம் கெஞ்சுவதும், ஆனால் பேசிக்கொண்டிருக்கும்போதே, அச்சிறுவன், குடியிருப்பு கட்டிடத்தில் உள்ள வெளிப்புற ஏசி இயந்திரத்தில் இருந்து திடீரெனக் குதிப்பதையும் காண முடிகிறது.
இந்நிலையில் படுகாயமடைந்த குறித்து சிறுவன் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளான் எனவும் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவன் விழுந்து விடப்போகிறான் என்ற கவலையால், அவனை உள்ளே செல்லும்படி வற்புறுத்தவே அவனது தாயார் அவனை தாக்கியதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.
எனினும் “மாடியிலிருந்து குதிப்பதை விட அவன் தனது தாயைப் பார்த்தே அதிகளவில் அச்சமடைந்துள்ளான் எனப் பலரும் தெரிவித்துள்ளனர்.
அச்சிறுவனின் குடும்பப்பெயர் யான் என்றும் அவரது தந்தை வேறு நகரத்தில் வேலை செய்வதாகவும், யான் தனது தாயுடன் வசிப்பதாகவும் தெரிய வந்திருக்கிறது.
சீனாவின் பிரபல சமூக வலைதளமான “வெய்போ”வில் (Weibo) குறித்த சிறுவன் கீழே விழும் வீடியோவானது 1 கோடிக்கும் அதிகமானமுறை பார்வையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.