2023 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இறுதி போட்டி இன்று திருநெல்வேலி இந்தியா சிமெண்ட்ஸ் லிமிடெட் கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இன்றைய போட்டியில் நடப்பு சம்பியன் லைக்கா கோவை கிங்ஸ் அணியை முதன்முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்த நெல்லை றோயல் கிங்ஸ் அணி எதிர்கொள்ளவுள்ளது.
முதலாவது தகுதிச் சுற்று போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ச்சியாக இரண்டாவது முறை தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் இறுதிப்போட்டிக்குள் ஷாரூக் கான் தலைமையிலான லைக்கா கோவை கிங்ஸ் முதல் அணியாக நுழைந்தது.
மறுபுறம் நெல்லை றோயல் கிங்ஸ் அணி, இரண்டாவது தகுதிச் சுற்று போட்டியில் இறுதி பந்துவரை நீடித்த அந்தப் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸிற்கு எதிராக நம்பமுடியாத மகத்தான வெற்றியைப் பதிவு செய்து முதன்முறையாக தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
லைக்கா கோவை கிங்ஸ் அணியைப் பொருத்தவரை அந்த அணியின் நட்சத்திர வீரரும் இந்த சீஸனில் அதிக ஓட்டங்களை குவித்த 2வது வீரருமான சாய் சுதர்ஷன் இல்லாத நிலையிலும் அந்த அணியின் துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக சுஜய், சுரேஷ் குமார், சச்சின், முகிலேஷ் ஆகியோர் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுக்க இறுதிக்கட்டத்தில் அதிரடி காட்ட ஷாரூக் கான் மற்றும் ராம் அர்விந்த் ஆகியோர் உள்ளனர்.
பந்துவீச்சில் அதிக விக்கெட்கள் எடுத்த பட்டியலில் கௌதம் தாமரை கண்ணன், எம் சித்தார்த், எம் மொஹமட் மற்றும் வி யுதீஷ்வரன் போன்ற இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்களும் நிறைந்துள்ளனர்.
ஏற்கனவே கடந்த முறை சம்பியன் பட்டத்தை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியுடன் பகிர்ந்து கொண்ட லைக்கா கோவை கிங்ஸ் அணி, இம்முறை கண்டிப்பாக நெல்லை றோயல் கிங்ஸை வீழ்த்தி தொடர்ச்சியாக இரண்டாவது முறை டி.என்.பி.எல் பட்டத்தைக் கைப்பற்ற முயற்சிக்கும்.