பொது பாதுகாப்பு அமைச்சர், தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
காலி முகத்திடல் உட்பட நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுக்கத் தவறியதாகக் கூறி, “உயிர் உரிமை” அமைப்பினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதில் பொது பாதுகாப்பு அமைச்சர், தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தனர்.
இந்த மனு இன்று எஸ். துரைராஜா, யசந்த கோதாகொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கடந்த ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைத் தடுக்க பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என மனுதாரர்கள் சுட்டிக்காட்டினர்.
அத்தோடு இந்த நடவடிக்கையால் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
குறித்த மனு தொடர்பில் அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி ஷமிந்த விக்கிரம முன்வைத்த ஆரம்ப ஆட்சேபனைகளை கருத்திற்கொண்டு மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இந்த முடிவை அறிவித்துள்ளது.