2023 ஆம் ஆண்டுக்கான பெண்களுக்கான உலகக்கிண்ண கால்பந்து தொடரின் காலிறுதி போட்டிகள் அனைத்தும் தற்போது நிறைவுக்கு வந்துள்ளது. அதன்படி நேற்று இடம்பெற்ற இரண்டு போட்டிகளில் அவுஸ்ரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் வெற்றிபெற்றுள்ளன.
அவுஸ்ரேலியா அணி பிரான்சுக்கு எதிரான போட்டியில் பெனால்டி ஷூட் அவுட்டில் 7-6 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, வரலாற்றில் முதல் முறையாக மகளிர் உலகக் கிண்ண அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
உலக தரவரிசையில் 10 ஆவது இடத்தில் இருக்கும் அவுஸ்ரேலியா, ரவுண்ட் 16 சுற்றில் டென்மார்க்கை 2-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. அதேநேரம் தரவரிசையில் 5 ஆவது இடத்தில் உள்ள பிரான்ஸ், 4-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியிருந்தது.
மற்றுமொரு காலிறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் கொலம்பியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் இங்கிலாந்து 2 – 1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
போட்டியின் முதல் பாதியில் லீசி சாண்டோஸ் அடித்த கோல் காரணமாக கொலம்பியா அணி முன்னிலை வகித்தாலும் 45 ஆவது நிமிடத்தில் லோரன் ஹெம்ப்பும் 63 ஆவது நிமிடத்தில் அலெக்ஸியா ருஸ்ஸோவும் அடித்த கோல்கள் இங்கிலாந்தின் வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்தியது.
இந்த வெற்றியின் மூலம் எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள அரையிறுதி போட்டியில் அவுஸ்ரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.