ஈரானின் மத்திய நகரமான ஷிராஸில் உள்ள ஷியா முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலத்தின் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த தாக்குதலில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இருப்பினும் நேற்றைய தினம் இந்த தாக்குதலுக்கு எந்தவொரு குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபார்ஸ் மாகாணத்தில் அமைந்துள்ள மற்றும் ஷியா முஸ்லிம்களின் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படும் இந்த வழிபாட்டுத்தலம் மீது கடந்த ஆண்டு ஓக்டோபர் 26 அன்றும் தாக்குதல் நடத்தப்பட்டது.
கடந்த ஒக்டோபர் மாதம் 15 பேரை பலிகொண்ட இதே ஆலயத்தின் மீதான தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது.
ஈரானின் பாராளுமன்றம் மற்றும் அயதுல்லா ருஹோல்லா கொமேனியின் கல்லறையை குறிவைத்து 2017 இல் நடந்த இரட்டை குண்டுவெடிப்பு உட்பட ஈரானில் முந்தைய தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.