மதவாதத்தை முதலீடாக்க நீதிபதியை விமர்சிப்பதை ஏற்க முடியாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
குருந்தூர் மலை விவாகாரத்தில் தீர்ப்பு வழங்கிய நீதிபதியை அவமதித்து கருத்து வெளியிட்ட தென்னிலங்கை அரசியல் வாதிகளின் செயற்பாட்டை தாம் வன்மையாக கண்டிப்பதாவும் கூறியுள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி சில இனவாத அரசியல்வாதிகள் வெளியிடுகின்ற கருத்துக்கள் தமிழ் மக்களை ஆத்திரமூட்டுவதாக இருக்கின்றது என்றும் கூறியுள்ளார்.
குருந்தூர்மலை விடயம் தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் உடன்பாடு இல்லை எனில் அதை மேல்முறையீடு செய்வதற்கும் அல்லது உச்ச நீதிமன்றம் செல்வதற்கும் சட்டத்தில் வழிவகைகள் உள்ளது என்றும் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான கருத்துக்கள் இன நல்லிணக்கத்தில் இடைவெளியை உருவாக்கும் ஒன்றாகவே அமைகின்றது என்றும் நீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பதும் தனிப்பட்ட ரீதியில் நீதிபதியை விமர்சிப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.