யாழில். மருத்துவ தவறால் 08 வயது சிறுமியின் இடது கை, மணிக்கட்டின் கீழ் அகற்றப்பட்டுள்ள நிலையில் சிறுமி தொடர்ந்தும் வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியை சேர்ந்த 08 வயது சிறுமி காய்ச்சல் காரணமாக கடந்த 25ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலை நோயாளர் விடுதியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
26ஆம் திகதி, சிறுமியின் கையில் “கனுலா” (குளுக்கோஸ் , மருந்துகள் ஏற்றுவதற்காக மணிக்கட்டின் கீழ் பொருத்தப்படும் ஊசி) பொருத்தப்பட்டு, நோய் எதிர்ப்பு மருந்து (அன்டி பயோடிக்) ஏற்றப்பட்டுள்ளது.
“கனுலா” உரிய வகையில் சிறுமியின் கையில் பொருத்தாததால், சிறுமிக்கு வலி ஏற்பட்டுள்ளது. அது குறித்து சிறுமி கூறிய போதிலும் தாதியர்கள் அது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை.
இந்நிலையில் சிறுமியின் இரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்பட்டு, மணி கட்டின் கீழ் செயலிழந்துள்ளது. இதன் காரணமாக சிறுமியின் கையை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டுள்ளது.