ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அமெரிக்க விஜயம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகிற போதும், இந்த விஜயத்தினால் நாட்டுக்கு பல நன்மை ஏற்படும் என காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இடமபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவும் ஏனைய உலக வல்லரசுகளுக்கு இடையிலான நட்புறவும் மேலும் வலுவடைந்துள்ளது என்றும் ருவன் விஜயவர்தன சுட்டிக்காட்டினார்.
அமெரிக்காவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்றதன் பின்னர், அங்கு வெற்றிகரமாக இடம்பெற்ற கலந்துரையாடல்களைத் தொடர்ந்து நாட்டுக்கு பல சாதகமான முடிவுகள் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.
இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப அரசாங்கம் முன்னெடுத்துவரும் வேலைத்திட்டத்தின் முன்னேற்றத்தையும் சர்வதேச நாடுகளும் அமைப்புக்களும் பாராட்டியுள்ளதாகவும் காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன மேலும் தெரிவித்தார்.