மட்டக்களப்பு மயிலத்தமடு,மாதவனை பகுதியில் 50க்கும் மேற்பட்ட தேரர்களும்,
400க்கும் மேற்பட்ட சிங்களவர்களும் வருகைதந்து ஆக்கிரமிப்பு பணியில் ஈடுபட்டுவருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பகுதியில் தீவிரமாக ஆக்கிரமிப்பு பணி இடம்பெற்று வருகின்றது எனவும், எங்களுக்கு தீர்வுபெற்றுத்தராதவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்குள் நடத்தும் போராட்டத்திற்கும் ஆதரவு வழங்க முன் வராதமை கவலை அளிப்பதாகவும் மட்டக்களப்பு மாவட்ட கால்நடை பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட கால்நடை பண்ணையாளர்களினால் இன்று பகல் சித்தாண்டி சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்திற்கு முன்பாக கவன ஈர்ப்பு பேரணி மற்றும் மனித சங்கிலி போராட்டமும் முன்னெடுக்கப்பட்டபோதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
தமது மேய்ச்சல் தரை காணி அபகரிக்கப்படுவதை தடுத்து நிறுத்துமாறு கோரியும் காணியை அபகரிப்பாளர்களை அங்கிருந்து அகற்றுமாறு கோரியும் மட்டக்களப்பு-வாழைச்சேனை பிரதான வீதியில் சித்தாண்டி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக கடந்த 22நாட்களாக கால்நடை பண்ணையாளர்கள் போராடிவருகின்றமை குறிப்பிடத்தக்கது