நாட்டின் எதிர்காலம் தொழில்நுட்பம் மற்றும் பசுமைத் துறை என்பவற்றிலேயே தங்கியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற தேசிய தகவல் தொழிநுட்பம் மற்றும் வர்த்தக செயல்முறை முகாமைத்துவத் தொழில் கண்காட்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்’ இக்கண்காட்சி மூலம் நமது நாட்டிற்கு எவ்வாறு பயன் பெறுவது என்பதிலேயே நான் கவனம் செலுத்தினேன். இன்று வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புகின்ற தருணத்தில் நாம் இருக்கிறோம்.
நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்குவது மட்டும் போதுமானதல்ல.
பெற்ற கடனை திரும்பச் செலுத்த வேண்டும். நமக்குத் தேவையான பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும். அதற்கும் பணம் செலுத்த வேண்டும்.
அதற்கான அந்நியச் செலாவணி எம்மிடம் இல்லை. எனவே, நாம் மீண்டும் கடன் பெற வேண்டியேற்படும்.
நாம் கடன் சக்கரத்தில் தொடர்ந்து இருக்கப்போகின்றோமா அல்லது அதிலிருந்து வெளியேறி முன்னேறிச் செல்கிறோமா என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
நாட்டின் எதிர்காலம் தொழில்நுட்பம் மற்றும் பசுமைத் துறை என்பவற்றில் தங்கியுள்ளது.
எனவே நாம் அதற்குள் செல்ல வேண்டும். நெல் விளைச்சல் வெற்றிபெறாதபோது, கறுவா விளைச்சலுக்கு சென்றோம்.
கறுவாவை இழந்தபோது கோப்பி பயிரிடப்பட்டது. கோப்பி இல்லாத காலத்தில் தேயிலை, இரப்பர் தென்னை ஆகியன பயிரிடப்பட்டன.
இப்போது நாங்கள் சுற்றுலாத் துறை மற்றும் ஆடைத் தொழில் செய்கிறோம். இவை அனைத்தும் கடந்த காலத்தைச் சேர்ந்தவை. ஆனால் நாம் எதிர்காலத்திற்கு செல்ல வேண்டும். இந்த நாட்டின் தேவையை விட இரண்டு மடங்கு மக்களை நாம் உருவாக்க வேண்டும்.