காசா மீது தரைவழியான ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு தாம் தயாராகி வருவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
ஹமாஸால் கட்டுப்படுத்தப்படும் பாலஸ்தீன பகுதிக்குள் படைகள் எப்போது செல்வது என்பது குறித்து அரசாங்கத்தின் சிறப்பு போர் அமைச்சரவையால் முடிவு எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
ஏற்கனவே ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகளை கொன்றுள்ளோம் என்றும் இது ஆரம்பம் மட்டுமே என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
சுமார் 1,400 பேரைக் கொன்ற இஸ்ரேல் மீதான ஹமாஸ் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, காசா பகுதி மீது இஸ்ரேல் பல நாட்கள் தீவிர குண்டு தாக்குதலை நடத்தி வருகின்றது.
இதில் 6,500க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஹமாஸ் தாக்குதலுக்கு வழிவகுத்த பாதுகாப்பு தோல்விகளுக்கு இதுவரை பொறுப்பேற்காத நெதன்யாகு, சம்பந்தப்பட்ட அனைவரும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என கூறியுள்ளார்.
இதேவேளை காசா மீதான படையெடுப்பை இப்போதைக்கு தாமதப்படுத்த இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி, வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.