அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இடைக்காலக் குழுவின் மீதான வர்த்தமானியை இடைநிறுத்தி நேற்று வழங்கிய தீர்ப்பு தொடர்பில், விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க, நீதித்துறை மீது கடுமையான விமர்சனத்தை விடுத்துள்ளார்.
இந்தத் தீர்ப்பு ஒரு தரப்பின் கருத்தை மட்டுமே கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாகவும் சட்டமா அதிபர் அமைச்சுக்கு ஆதரவளிக்கவில்லை எனவும், ஊழல் மோசடிகளில் ஈடுபடும் கிரிக்கெட் அதிகாரிகளை பாதுகாக்கும் வகையில் செயற்படுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை ஆற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் சபை ஊழல் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி, நீதி அமைச்சர், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர், பொலிஸ்மா அதிபர், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் ஆணையாளர், குற்றப்புலனாய்வு திணைக்களம் ஆகியவற்றிடம் கோரிக்கை விடுத்ததாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் கணக்காய்வு அறிக்கையை சட்டமா அதிபருக்கு அனுப்பி, மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்த போதும் இதுவரை சட்டமா அதிபர் சட்ட நடவடிக்கை எடுக்காது புறக்கணித்துவருகின்றார் என அமைச்சர் ரோஹசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.