நாரம்மல, தம்பலஸ்ஸ பிரதேசத்தில் சாரதி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, நாரம்மல பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவத்தை கண்டித்து நேற்று (18) இரவு நாரம்மல பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஒன்று கூடி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உட்பட பிரதேசவாசிகள் வன்முறையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கூட்டத்தினர் வாயில்களை உடைத்து, பொலிஸாரின் உடைமைகளை சேதப்படுத்தியுள்ளனர். இதன்படி, நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழுவொன்றை களமிறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் நாரம்மல பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, சிறிய லொறி ஒன்றை நாரம்மல நகருக்கு அருகில் நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டு, அந்த உத்தரவை மீறி வாகனம் செலுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அங்கு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் லாரியை மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்று தம்பலாஸ்ஸ சந்திக்கு அருகில் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, சப்-இன்ஸ்பெக்டரின் துப்பாக்கியால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிசூட்டில் சாரதி இலக்காகியுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி லொறியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அலவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிளை நாரம்மல பொலிஸார் கைது செய்துள்ளனர்.