எதிர்வரும் பண்டிகை காலத்தில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மரக்கறிகளின் விலைகளை குறைப்பதற்கு அமைச்சரவையில் கலந்துரையாடி தனியான வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
500,000 பாடசாலைகளுக்கு மதிய உணவு வேலைத்திட்டம் குறித்து முதன்முறையாக கொழும்பில் உள்ள ரமடா ஹோட்டலில் நேற்று (01) நடைபெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க, உலக உணவு அமைப்பின் பிரதிநிதி டொக்டர் அப்துல் ரஹீம் சித்தாக்கி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஒரு மாணவருக்கு மதிய உணவுக்காக 75 கிராம் அரிசியும் ஐந்து இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு நாளொன்றுக்கு 04 மெற்றிக் தொன் அரிசியும் ஒதுக்கப்படவுள்ளது. உலக உணவு அமைப்பின் அனுசரணையில் விவசாய அமைச்சு, கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு ஆகியன இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.
இந்நிலையில் ,கடந்த ஆண்டு (2023) தரவுகளின்படி, இலங்கையில் 15.3 வீதமான பாடசாலை மாணவர்கள் போஷாக்கு குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 7.4 வீதமான பாடசாலை மாணவர்கள் அதிகப்படியான போசாக்கினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.
பெற்றோரின் பொருளாதாரப் பிரச்சினை காரணமாக பிள்ளைகளின் போஷாக்குக் குறைபாடுகள் தோன்றியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.