எதிர்வரும் பண்டிகை காலத்தில் பெரிய வெங்காயத்தின் விலையை குறைக்கும் வகையில் கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க வர்த்தக அமைச்சு நேற்று நடவடிக்கை எடுத்துள்ளது.
பண்டிகை காலத்தில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குவது தொடர்பில் அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்களுக்கும் வர்த்தக அமைச்சருக்கும் இடையில் கலந்துரையாடல் நேற்று நடைபெற்றது. அதில், இறக்குமதியாளர்கள் தங்களுடைய கையிருப்பிலுள்ள பெரிய வெங்காயத்தை 450 ரூபா மற்றும் 500 ரூபாவிற்கு இடையில் விற்பனை செய்ய இணக்கம் தெரிவித்துள்ளனர்.
அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்களுடனான கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ளதுடன், போட்டி விலையில் தமது பொருட்களை உள்ளூர் சந்தைக்கு வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதேவேளை பெரிய வெங்காய இறக்குமதிக்கு பாகிஸ்தான் அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்தனர். எனினும், ஒல்லாந்து மற்றும் துருக்கி ஆகிய பிற நாடுகளில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வதோடு, கையிருப்பிலுள்ள வெங்காயத்தை பண்டிகைக் காலங்களில் குறைந்த விலையில் வழங்க தயாராக உள்ளதாக இறக்குமதியாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.