நாட்டில் இன்றும் தமிழ் தேசிய இனப் பிரச்சனை இருக்கின்றது என்பதை சிங்கள தரப்பிற்கு ஆணித்தரமாக உறுதிப்படுத்த வேண்டும் என்றால் ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கவேண்டும் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற தமிழீழ விடுதலை இயக்கத்தின் 11 வது தேசிய மாநாட்டில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இலங்கையில் ஏற்பட்டு இருக்கக் கூடிய இந்த பொருளாதார சீரழிவுக்கு முக்கிய காரணங்கள் என்னவென்றால் அது தேசிய இனப் பிரச்சனையும், அந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு ஒரு யுத்தத்தை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்டதும், அந்த யுத்தத்திற்காக அவர்கள் வாங்கிய கடனுமேயாகும்.
எனினும் அந்த மூல காரணத்துக்கு தீர்வு காண்பதை விடுத்து இன்று பொருளாதார பிரச்சனைக்கு தீர்வு கண்டால் அந்த பிரச்சனையெல்லாம் தீர்ந்து விடும் என்ற சிந்தனை இன்னும் பெரும்பான்மை சமூகத்தினரிடம் உள்ளது.
இலங்கையில் அரசியல் ஸ்தீரத் தன்மை இருந்தார் மாத்திரமே இலங்கைக்கான முதலீடுகளை வெளிநாடுகளிடம் இருந்தும், தனிநபர்களிடம் இருந்தும் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த நாட்டில் வெடுக்குநாறி மலை பிரச்சினைகளும், குருந்தூர் மலை பிரச்சனைகளும், வடக்கு மற்றும் கிழக்கில் பௌத்த மேலாதிக்கத்தை ஏற்படுத்துவதற்காக நடைபெறும் செயற்பாடுகளும் தொடர்ந்து இடம்பெறுமானால் யாரும் இலங்கைக்கு முதலீடு செய்ய முன்வரமாட்டார்கள் ” இவ்வாறு சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.