இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோடு அவர்கள் பயன்படுத்திய இரண்டு படகுகளும் அரசுடமையாக்கப்பட்டுள்ளன.
கடந்த 21ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பினுள் மூன்று படகுகளில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , 25 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் மீதான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது அவர்கள் தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டனர்.
மூன்று படகுகளில் ஒரு படகோட்டிக்கு 06 மாத சிறைத்தண்டனை விதித்த மன்று , ஏனைய 24 கடற்தொழிலாளர்களுக்கும் 18 மாத சிறைத்தண்டனை விதித்து , அதனை 05 வருட காலங்களுக்கு ஒத்திவைத்தது. அத்துடன் மூன்று படகுகளில் இரு படகுகளை அரசுடைமையாக்கவும் நீதிமன்றம் பணித்துள்ளது.