வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டின் அழகு நகரமாக விழங்கும் சென்னைக்கு இன்று 385வது பிறந்தநாள் .
அதாவது சென்னை நகரம் உருவாகி இன்றுடன் 385 ஆண்டுகள் ஆகிறது.
சென்னை நகருக்கு அப்பெயரைப் பெரும் முன்பே நீண்ட வரலாறு உள்ளது. பல்லவ, சோழ மற்றும் விஜயநகர பேரரசுகளில் சென்னை ஒரு முக்கிய இடமாக விளங்கியதாகக் கருதப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வர்த்தகர்களும், மத போதகர்களும் சென்னைக் கடற்கரை மூலம் வந்துள்ளனர். இந்தப் பகுதி முதலில் சென்னப்பட்டணம் என்ற சிறிய கிராமமாக இருந்துள்ளது.
1639-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22-ஆம் திகதி தான், தமிழர்களின் அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் இந்நகரம் உருவானது. அன்றைய தினம், கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ்டே, ஆண்ட்ரு கோகன் ஆகியோர் தங்களது உதவியாளர் பெரிதிம்மப்பா என்பவருடன் இப்போது புனித ஜோர்ஜ் கோட்டை உள்ள இடத்தை வாங்கினார்கள். அந்த இடத்தை இவர்களிடம் விற்ற அய்யப்பன் மற்றும் வேங்கடப்பன் ஆகியோரின் தந்தையான சென்னப்ப நாயக்கர் என்பவரின் நினைவாகக் கோட்டைக்கு வடக்கில் உள்ள ஊர் சென்னப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது.
1639-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி இந்த இடத்தை ஆங்கிலேயர்கள் வாங்கியதற்கான ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. இந்த நாள் தான் தற்போது சென்னை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கோட்டைக்கு அருகில் இருந்த திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், திருவொற்றியூர், திருவான்மியூர் ஆகிய பகுதிகள் மிக பழமையான கிராமங்கள் ஆகும். புனித ஜார்ஜ் கோட்டையை சுற்றி உருவான குடியிருப்புகளில் ஆங்கிலேயர்கள் வசித்தனர்.
அந்த பகுதி வெள்ளை நகரம் என அழைக்கப்பட்டது. அதே போன்று கோட்டையை சுற்றி இந்தியர்கள் வாழ்ந்த நகரம் கருப்பு நகரம் என்று அழைக்கப்பட்டது. பொதுவாக கோட்டை அமைந்த பகுதி ஜார்ஜ் நகரம் என்றே குறிப்பிடப்பட்டது.
இதற்கிடையே கோட்டை மற்றும் ஆங்கிலேயர்கள் விரிவுபடுத்திய பகுதி மதராசப்பட்டினத்திற்கு அருகில் இருந்ததால் அப்பகுதி உள்ளூர் மக்களால் மதராசப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது.
அதே போன்று கோட்டை கட்ட நிலம் வழங்கிய மன்னர் டமர்லா வெங்கடபதி நாயக், அவரின் தந்தை பெயரான சென்னப்ப நாயக் என்பதை நினைவுகூர சென்னப்பட்டினம் என்ற பெயரை அப்பகுதிக்கு சூட்டினார்.
நாளடைவில் இந்த நகரம் முழுவதுமே மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டது.
திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்களும் மெட்ராஸ் நகரத்துடன் இணைந்தது. 1688-ம் ஆண்டு மெட்ராஸ் பகுதிக்கு நகராட்சி அந்தஸ்து வழங்கப்பட்டது.
இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையை சென்னை பெற்றது.
அதன்பிறகு பிரிட்டிஷ் அரசின் கீழ் கொண்டுவரப்பட்ட 4 இந்திய குடியிருப்புகளை இணைத்து “மெட்ராஸ் மாகாணம்” உருவாக்கப்பட்டது.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1956-ம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அப்போது மெட்ராஸ் மாகாணம் தனி மாநிலம் ஆனது.
அதன் பின்னர் பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு, மெட்ராஸ் மாகாணம் 1969-ம் ஆண்டு ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றப்பட்டது. அதன் தலைநகரமாக திகழ்ந்த மெட்ராஸ் 1996-ம் ஆண்டு சென்னை என பெயர் மாற்றப்பட்டது.
அதன் பிறகு சென்னை நகரம் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைய தொடங்கியது. சென்னை நகரின் பரப்பளவு பரந்து விரியத் தொடங்கியது. சென்னையை சுற்றிலும் புதிய பகுதிகள் உருவாக்கப்பட்டு அவை வேகமான வளர்ச்சியை பெற்றன.
அதன் காரணமாக சென்னை தற்போது பெருநகர சென்னை மாநகராட்சி என்ற அந்தஸ்தோடு திகழ்கிறது. இதனால் பல்வேறு துறைகளிலும் சென்னை நகரம் முதலிடம் பெற்று சிறப்புடன் திகழ்கிறது.
சென்னையில் தற்போது 1 கோடியே 22 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். தென் இந்தியாவின் நுழைவு வாயில் என்று வர்ணிக்கப்படும் சென்னை சில அம்சங்களில் நாட்டின் முதன்மை நகரமாக உள்ளது. இந்தியாவிலேயே அதிக ஆலயங்கள் கொண்ட சிறப்பு சென்னைக்கு உண்டு.
இந்த நிலையில் சென்னை தினத்தை கொண்டாடும் பழக்கம் கடந்த 2004-ம் ஆண்டு தொடங்கியது. அதன் பிறகு ஆண்டுக்கு ஆண்டு சென்னை தின கொண்டாட்டங்கள் அதிகரித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.