சீனாவின் ஹைனான் பகுதியில் இந்த ஆண்டு ஆசியாவை தாக்கிய மிக வலிமையான யாகி சூறாவளி காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், மின்னல், மழை மற்றும் பலத்த காற்று காரணமாக 92 பேர் காயமடைந்துள்ளனர்.
யாகி புயல், மணிக்கு 234 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்துள்ளது. இதனால், மரங்கள் விழுந்து, வீதிகள் தண்ணீரில் மூழ்கி, 8 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்த 4 இலட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ரயில்கள், படகுகள், வானூர்திகள் என்பனவற்றின் சேவைகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இது தவிர தென் பிராந்தியத்தை அண்மித்த பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன. நேற்று முதல் அனைத்து சுற்றுலாத் தலங்களையும் மூடும்படி அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தவிர உலகின் மிக நீளமான ஹொங்கொங்கை இணைக்கும் பாலமும் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் , யாகி சூறாவளியானது வியட்னாமின் வடக்கு பகுதியை மணிக்கு 149 கிலோ மீற்றர் வேகத்தில் கடக்கவுள்ளது. குறித்த பகுதியில் நிலச்சரிவு மற்றும் பல அனர்த்தங்கள் நேரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் பொதுமக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் , உயிரிழப்புகளும் அதிகமாக பதிவாகக்கூடும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்ிபடத்தக்கது.