ரஷ்யா-உக்ரைன் இடையே 2 ஆண்டுக்கு மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில், இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமைதிப் பேச்சு வார்த்தையில் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் மத்தியஸ்தர்களாக செயல்பட முடியும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்தார்.
இந்திய பிரதமர் மோடியின் ரஷ்யா, உக்ரைன் பயணத்துக்கு பிறகு புடின் இந்தக் கருத்தை தெரிவித்தார். இதே கருத்தை உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியும் கூறியுள்ளார்.
இரு நாட்டு தலைவர்களுடனும் இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் நல்லுறவு இருக்கும் நிலையில், போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியாவின் முன்முயற்சியை உலகமே எதிர்பார்க்கிறது.
இந்நிலையில், ஜெர்மனியில் நடந்த வெளியுறவு அலுவலகத்தின் தூதர்கள் மாநாட்டில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டார். அப்போது ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து செய்தியாளர்களிடம் அவர் கருத்து தெரிவித்தார்.
அதற்கமைய , இந்த மோதல் போர்க்களத்தில் தீர்க்கப்படும் என நினைக்கவில்லை. ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தை நடக்கும். பேச்சுவார்த்தை நடக்கும்போது ரஷ்யா மற்றும் உக்ரைன் அந்தப் பேச்சுவார்த்தையில் இருக்கவேண்டும்.
போர்க்களத்தில் இருந்து நீங்கள் ஒரு தீர்வைப் பெறப் போகிறீர்கள் என நாங்கள் நினைக்கவில்லை. நீங்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம்.
உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்பட்டால், நாங்கள் எப்போதும் அதை வழங்க தயாராக இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.