உலகையே உலுக்கிய அமெரிக்காவின் இரட்டைக்கோபுரத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 23 வருடங்கள் ஆகின்றன.
உலகின் தூங்கா நகரம் என வர்ணிக்கப்படும் அமெரிக்காவின் நியூயோக் நகரில், இதே திகதியில் (11/ 09/2001) காலை 8:46 மணியளவில் வானளவு உயரத்தில் இருக்கும் இரட்டை கோபுரங்கள் மீது அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான பயணிகள் விமானமொன்று மோதியது.
81 பயணிகள் மற்றும் 11 பணியாளர்களுடன் வொஷிங்டனில் இருந்து லொஸ் ஏஞ்சலஸ் நகரத்துக்கு பயணிக்கவிருந்த விமானமே இவ்வாறு மோதியது.
எதிர்பாராத நேரத்தில் இடம்பெற்ற இவ் விபத்தினால் அமெரிக்காவே அதிர்ந்துபோய் இருந்த நிலையில் தொடர்ந்து 18 நிமிடங்கள் இடைவெளியில்அதாவது காலை 9:03க்கு மற்றொரு விமானம் இரட்டை கோபுரத்தின் தெற்கு கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்தியது.
இந்த விமானமும் அதே வொஷிங்டன் விமான நிலையத்தில் இருந்து 56 பயணிகள் மற்றும் 9 பணியாளர்களுடன் புறப்பட்ட விமானமாகும்.
இந்த தாக்குதலையடுத்து இரட்டை கோபுரக் கட்டிடங்கள் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கின. நியூயோர் நகரம் முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. கட்டடங்கள் தெருக்களில் சரியத் தொடங்கின. ஆயிரக்கணக்கான மக்கள் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.
நகரம் முழுவதும் அழுகுரல் ஒலிக்க சில மணிநேர இடைவெளியில் அமெரிக்காவின் இராணுவ தலைமையகமான பெண்டகன் மீது அடுத்த தாக்குதல் இடம்பெற்றது.
இத்தாக்குதலினால் அமெரிக்கா மட்டுமல்ல. ஒட்டுமொத்த உலகமே உறைந்து போனது. இந்நிலையில் குறித்த தாக்குதலுக்கு அல் கொய்தா அமைப்பு பொறுப்பேற்றது.
இந்த நேரத்தில் 4வதாக மற்றொரு விமானம் கடத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. எந்த இடத்தில் தாக்குதல் நடத்தும் என எதிர் பார்க்கப்பட்ட நேரத்தில் பென்சில்வேனியா மாகாணம் அருகே வெட்ட வெளியில் குறித்த விமானம் விழுந்து நொருங்கியது.
விமானத்திலிருந்த தீவிரவாதிகளுடன், அதில் வந்த பயணிகள் சண்டையிட்டதன் காரணமாகவே விமானம் வெட்ட வெளியில் விழுந்து நொறுங்கியது என விசாரணையில் தெரிய வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விமானம் தாக்கச் சென்ற இடம் எது என விடை என்பது இப்போது வரை மர்மமாகவே உள்ளது.
இந்த ஒட்டுமொத்தத் தாக்குதலில் 19 பயங்கரவாதிகள் உட்பட மொத்தம் 2, 996 பேர் உயிரிழந்தனர்.
இதில் இரட்டை கோபுரத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க சென்ற 300 தீயணைப்பு வீரர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதலால், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர். அத்துடன் தாக்குதலின்போது ஏற்பட்ட புழுதி புகை காரணமாக 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இப்போதும் அவதிப் பட்டு வருவதாக கடந்த 2011 ஆம் ஆண்டு அமெரிக்கா தெரிவித்திருந்தது.
இதற்கிடையில் குறித்த தாக்குதலுக்கு அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த புஷ் தான் காரணம் என அமெரிக்காவைச் சேர்ந்த சிலர் குற்றம் சாட்டினர். இது குறித்த சில ஆவணப்படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அதேசமயம் அல் கொய்தா அமைப்பின் தலைவன் ஒசாமா பின் லேடனை பிடித்து கொடுப்பவர்களுக்கு 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை சன்மானமாக வழங்குவதாக ஓர் அறிவிப்பை எப்பிஐ அப்போது வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் தலைமையில், கடந்த 2011 ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் திகதி, பாகிஸ்தானில் பதுங்கி இருந்த அல் கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடனை அமெரிக்கா, அதிரடியாக விமானங்களின் மூலம் இராணுவத்தை அனுப்பி கொலை செய்தது.
இதனையடுத்து கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம்திகதி இரட்டை கோபுரம் இருந்த இடத்தில், மீண்டும் புதிய வர்த்தக மையக் கட்டிடமொன்று திறக்கப்பட்டது.
அதேசமயம் பென்டகன் மற்றும் சாங்ஸ்வில் பகுதியில் இத் தாக்குதல் தொடர்பான நினைவு மையங்களும் திறக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.