பிரிட்டனில் ‘சார்ஜ்பேக்’ (Chargeback)முறையை தவறாக பயன்படுத்தி கடைகள் மற்றும் உணவகங்களில் மோசடி செய்வது அதிகரித்து வருவதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்த நடைமுறை தற்போது ‘ஒரு தொற்றுநோயாக’ மாறிவிட்டதாக அவர்கள் கூறுகின்றனர்
சார்ஜ்பேக் என்பது(Chargeback) நுகர்வோர் ஏமாற்றப்பட்டதாகவோ அல்லது பொருள்ஃசேவை குறைபாடாகவோ இருந்தால், வங்கியின் மூலம் பணத்தை மீட்டெடுக்க உதவும் பாதுகாப்பு நடைமுறையாகும்.
ஆனால் சிலர் உணவு அல்லது பொருட்களுக்கு முறையாக பணம் செலுத்திய பிறகும் ‘சட்டவிரோதமாக பணம் எடுக்கப்பட்டது’ என்று தெரிவித்து பணத்தை மீண்டும் பெறும் மோசடியில் ஈடுபடுகின்றனர்.
ஆராய்ச்சி நிறுவனமான டத்தோஸ் இன்சைட்ஸ் கணிப்பின்படி இந்த ஆண்டு உலகளவில் 281 மில்லியன் சார்ஜ்பேக் கோரிக்கைகள் வரலாம். அவற்றில் சுமார் 70 சதவீதம் வரை மோசடி தொடர்புடையவையாக இருக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, உலகின் மிகப்பெரிய சார்ஜ்பேக் தகராறு மேலாண்மை நிறுவனமான Chargebacks911 நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மோனிகா ஈடன், ‘இந்தப் பிரச்சனை உண்மையில் தொற்றுநோயாக மாறியுள்ளது. சிறு வணிகங்களுக்கும் தொழில்முனைவோருக்கும் இது கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது,’ என தெரிவித்துள்ளார்.
லண்டன் சோஹோவில் உள்ள தனது உணவகத்தை குறிவைத்து கடந்த ஆண்டு பணத்தையும் இழந்ததாக உணவக உரிமையாளர் நிமா சஃபாயி கூறுகிறார். இது தொடர்ந்தால் நாங்கள் நீடிக்க முடியாது’ என அவர் கவலை தெரிவித்தார்.
வணிக அமைப்புகள், சார்ஜ்பேக் முறையை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும் வகையில் வங்கிகள் மற்றும் அரசாங்கம் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றன.













