உயர் நீதிமன்ற உத்தரவின்படி, தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பாக ‘தமிழ்நாடு நாய் இனப்பெருக்க கொள்கை-2024’ நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
இதில், நாய்கள் இனப்பெருக்கத்துக்கான நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. மரபணு கோளாறுக்கு வழிவகுக்கும் இனப்பெருக்கத்தை தவிர்க்க வேண்டும் என்றும், வணிக ரீதியாக நாய்கள் வளர்ப்போர் பெற வேண்டிய உரிமம், நாய் வளர்ப்பு நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் இந்த நாய் இனப்பெருக்க கொள்கையில் இடம் பெற்றுள்ளன.
இந்த கொள்கையில், ராஜபாளையம், கோம்பை, சிப்பிபாறை ஆகிய நாய் இனங்கள் அங்கீகரிக்கப்பட்ட நாட்டு நாய் இனங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டை, ராமநாதபுரம் மண்டை, மலைப்பட்டி நாய், செங்கோட்டை நாய் ஆகிய நாய் இனங்கள் அழிந்துவிடாமல் தடுக்க, அவை அங்கீகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், இந்த நாட்டு நாய்களின் இனப்பெருக்கத்தை ஊக்குவிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து நாய் விற்பனை உரிமைதாரர்களும், நாய்களின் இனப்பெருக்கம், விற்பனைக்கான உரிமத்தை தங்கள் வளாகத்தில் காட்சிப்படுத்த வேண்டும், குட்டிகளை ஈன்ற பெண் நாய்களை, அடுத்த 12 மாதங்களுக்குள் மீண்டும் இனப்பெருக்கம் செய்ய வைக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாய்களுக்கு செயற்கை உடல் அமைப்புகள் வழங்கவும் தடைவிதிக்கப்படுகிறது.
இந்தியாவின் தட்பவெப்ப நிலை மற்றும் உடல் ஆரோக்கிய பிரச்சினைகளை தாங்க முடியாத செட் ஹவுண்ட், பிரெஞ்சு புல்டாக், அலாஸ்கன் மலாமுட், செளசௌ, கீஷோண்ட், நியூபவுண்டிலாட், நார்வே எல்கவுண்ட், திபெத்திய மாஸ்டிப், சைபீரியன் ஹஸ்கி, செயின்ட் பெர்னார்ட், பக் ஆகிய 11 நாய் இனங்கள் வளர்ப்புக்கு தடை விதிக்கப்படுகிறது என்று கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வளர்ப்பு நாய்களுக்கான உடல் நலனை கால்நடை மருத்துவர் மூலமாக அடிக்கடி சோதித்து பார்க்க வேண்டும் என்றும் நாய் இனப்பெருக்க கொள்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு ‘நாய் இனப்பெருக்க கொள்கை’ ஒன்றை வரையறுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில், தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பாக, நாய் இனப்பெருக்க கொள்கை தொடர்பான வரைவு அறிக்கை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இந்த வரைவு அறிக்கை பல்வேறு நிபுணர்களின் கருத்துகளுக்கு பிறகு தற்போது முழுமை பெற்றுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.