விலங்குகள் மற்றும் மனிதர்களை பாதிக்கும் பாக்டீரியா தொற்று காரணமாக ஹொங்கொங் உயிரியல் பூங்காவில் 12 ஆவது குரங்கு இறந்துள்ளது.
மெலியோடோசிஸ் பாக்டீரியா தொற்று காரணமாக கடந்த வாரத்தில் 11 குரங்குகள் ஏற்கனவே குறித்த பூங்காவில் உயிரிழந்து இருந்தன.
இந்த நிலையில் ஹொங்கொங் விலங்கியல் மற்றும் தாவரவியல் பூங்கா செவ்வாய்கிழமை (23) தாமதமாக 12 ஆவது குரங்கு இறந்துவிட்டதை உறுதிப்படுத்தியது.
கடந்த ஒக்டோபர் 13 முதல் குரங்குகளின் இறப்புகள் பதிவாகியதில் இருந்து குறித்த குரங்கு தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் உயிரிந்துள்ளது.
முன்னதாக உயிரிழந்த 11 குரங்குகளின் பிரேதப் பரிசோதனையில் அவற்றின் உறுப்புகளில் மெலியோடோசிஸைத் தூண்டும் பாக்டீரியாக்கள் அதிக அளவில் இருப்பது கண்டறியப்பட்டது.
தற்சமயம் உயிரிழந்த குரங்கும் குறித்த பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக என்பதை கண்டறிய பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குரங்குகளின் வாழ்விடத்திற்கு அருகிலுள்ள மண்ணில் இருந்து பாக்டீரியா வந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கூண்டுகளுக்கு அருகில் மண்ணைத் தோண்டிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் தங்கள் காலணிகளின் மூலம் அசுத்தமான மண்ணைக் கொண்டு வந்ததாக நம்பப்படுகிறது,
மெலியோடோசிஸ் ஆனது, அசுத்தமான மண், காற்று அல்லது தண்ணீருடன் தொடர்பு கொள்வதன் மூலம் பரவக்கூடிய ஒரு தொற்று நோய் ஆகும்.
மனிதர்களுக்கு தொற்று பரவும் ஆபத்து “மிகவும் குறைவு” என்று ஹொங்கொங் நகர பல்கலைக்கழகத்தின் கால்நடை தொற்றுநோயியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.