2023 ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்டவர்களின் உயிரை பறித்த ரயில் விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட மூன்று குற்றவாளிகளுக்கு ஒடிசா மேல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (30) நிபந்தனை பிணை வழங்கியது.
குற்றம் சாட்டப்பட்ட மொஹமட் அமீர் கான், அருண் குமார் மஹந்தா மற்றும் பப்பு யாதவ் ஆகியோர் கவனக் குறைவாக செயற்பட்டதன் விளைவாக விபத்து நிகழ்ந்ததாக கூறி 2023 ஜூலை 7, அன்று இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
சம்பவத்தின் போது அருண் குமார் மஹந்தா, பாலசோரில் ரயில்வேயின் மூத்த பிரிவு பொறியாளர்-பொறுப்பு மற்றும் தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றினார்.
அதே நேரத்தில் அமீர் கான், பாலசோருக்கு அருகிலுள்ள சோரோ பகுதியில் மூத்த பிரிவு பொறியாளராக பணிபுரிந்தார்.
இந்த நிலையில் அவர்கள் மூவரும் தலா 50 ஆயிரம் இந்திய ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
விபத்து நடந்த அதே பிரிவில் உள்ள தலைமையகத்தில் இவர்களை பணியமர்த்தக் கூடாது என ரயில்வே அதிகாரிகளுக்கு உத்தரவு உள்ளிட்ட 6 மேலதிக நிபந்தனைகளையும் நீதிமன்றம் பிறப்பித்தது.