இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவதும், இறுதியுமான ஒருநாள் போட்டியில் சர்ச்சைக்குரிய விதத்தில் நடந்து கொண்டமைக்காக மேந்தியத்தீவுகள் வீரர் அல்சாரி ஜோசப்புக்கு (Alzarri Joseph) இரு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த போட்டியில், இங்கிலாந்து அணியின் இன்னிங்ஸில் நான்காவது ஓவரின் போது கள மாற்றம் தொடர்பாக அணித் தலைவர் ஷாய் ஹோப்புடன் வலது கை வேகப்பந்து வீச்சாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் இங்கிலாந்து வீரர் ஜோர்டன் கொக்ஸின் விக்கெட்டை வீழ்த்தியதை அடுத்து கோபமாக நடந்து கொண்ட அவர், யாருக்கும் அறிவிக்காமல் மைதானத்தை விட்டு வெளியேறினார்.
இந்த சம்பவம் தொடர்பில் வெள்ளிக்கிழமை (08) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள கிரிக்கெட் மேற்கிந்தியத் தீவுகள் (CWI), அல்சாரி ஜோசப்புக்கு 2 போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிப்பதாக தெரிவித்தது.
பார்படாஸில் புதன்கிழமை (02) நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது, அல்சாரி ஜோசப்பின் கள நடத்தை அவர்களின் தொழில்முறை தரத்தை மீறுவதாக கண்டறியப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் CWI சுட்டிக்காட்டியுள்ளது.
இதனிடையே, தலைவர் ஷாய் ஹோப், எனது அணியினர் மற்றும் நிர்வாகத்திடம் நான் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கோருவதாக 27 வயதான மேற்கிந்தியத்தீவுகள் வீரர் அல்சாரி ஜோசப் கூறியுள்ளார்.
இந்த தடையால் அவர், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் முதல் 2 போட்டிகளை இழக்க நேரிடும்.
டி20 தொடர் நவம்பர் 9 சனிக்கிழமை பார்படாஸில் ஆரம்பமாகும்.