அமெரிக்காவிலிருந்து பயணித்த பயணிகள் விமானம் ஒன்று ஹெய்ட்டியின் தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸில் அமைந்துள்ள விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளது.
புளோரிடாவில் உள்ள ஃபோர்ட் லாடர்டேலில் இருந்து வருகை தந்த ஸ்பிரிட் ஏர்லைன்ஸின் 951 விமானம் மீதே துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
இதனால் விமானத்திலிருந்த பணிப்பெண்ணுக்கு சிறு காயம் ஏற்பட்டது. எனினும் பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
எவ்வாறெனினும், குறித்த விமானம் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பின்னர் அண்டை நாடான டொமினிகன் குடியரசிற்கு திருப்பி விடப்பட்டது.
மூன்று வாரங்களில் ஹெய்ட்டியின் தலைநகருக்கு மேல் பறந்த விமானத்தின் மீது நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.
தற்போது அரசியல் கொந்தளிப்பில் சிக்கித் தவிக்கும் ஹெய்ட்டிக்கான விமான சேவைகளை பல நிறுவனங்கள் இரத்து செய்துள்ளன.
ஆயுதமேந்திய கும்பல்களாலும், அதிகரித்து வரும் வன்முறைகளாலும் பாதிக்கப்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு மத்தியில் நாட்டில் புதிய பிரதமர் பதவியேற்றுள்ள நிலையில் இந்த சம்பவங்கள் நடந்துள்ளன