இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனக்கும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் மீதும் போர்க்குற்றங்களுக்காக பிடியாணை பிறப்பிக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ஐசிசி) 124 உறுப்பினர்கள் அல்லது உலகின் மூன்றில் இரண்டு பங்கு நாடுகள், காசாவில் போர்க்குற்ற செயல்களுக்காக வியாழன் (21) அன்று இந்த பிடியாணை உத்தரவினை பிறப்பித்தது.
மேலும், காசாவிற்கான அத்தியாவசிய மனிதாபிமான உதவிகளான உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ உதவிகளை நெதன்யாகு கட்டுப்படுத்தியதாகவும் ஐசிசி குற்றம் சாட்டியுள்ளது.
மேற்கு நாடுகளுடன் இணைந்த ஜனநாயக நாட்டின் தற்போதைய தலைவருக்கு எதிராக ஐசிசி பிடியாணை பிறப்பித்தது இதுவே முதல் முறை.
இந்த நிலையில், குறித்த உத்தரவுக்கு கண்டனம் வெளியிட்டுள்ள இஸ்ரேலிய பிரதமர், ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பானது யூத எதிர்ப்பின் விளைவு, அத்துடன் அது ஒரு நவீன ட்ரேஃபஸ் விசாரணைக்கு சமமாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரேஃபஸ் விசாரணை 1894 மற்றும் 1906 க்கு இடையில் பிரான்சில் ஒரு அரசியல் மற்றும் நீதித்துறை ஊழலாக இருந்தது.
ஜேர்மனியர்களுக்கு இராணுவ இரகசியங்களை விற்ற தேசத்துரோக வழக்கில் அந்த விசாரணையில் ஒரு யூத பிரெஞ்சு இராணுவ அதிகாரி Alfred Dreyfus தவறாக தண்டிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.