வெயாங்கொடை, வந்துரம்ப பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மத்திய அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள காணியில் புதையல் தேடும் பணி நேற்று (21) ஆரம்பமானது.
அத்தனகல்லை நீதிவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த இடத்தில் புதையல் இருப்பதாகக் கூறி பல வருடங்களாக புதையல் வேட்டையாடுபவர்களால் மேற்படி இடம் பல தடவைகள் தோண்டப்பட்டுள்ளதாக வெயங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பல சந்தர்ப்பங்களில் புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களுடன் பலரையும் பாதுகாப்புப் படையினர் கைது செய்திருந்தனர்.
தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட சோதனையின் போது அந்த இடத்தில் புதையல் எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது.
எவ்வாறெனினும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) நடத்திய விசாரணையில், நிலத்தில் ஏதோ ஒன்று புதைந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அத்தனகல்லை நீதிவான் நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பின்னர், தொல்பொருள் திணைக்களம், புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம், வெயங்கொடை பொலிஸ், வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் மீரிகம பிரதேச செயலக அதிகாரிகளின் மேற்பார்வையில் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.