அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி (Gautam Adani), அமெரிக்க அதிகாரிகளால், இலஞ்ச ஊழல் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவின் முக்கிய பங்குச் சந்தைகள் வியாழன் (21)அன்று சரிந்தன.
கௌதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி உட்பட ஏழு பிரதிவாதிகள், இந்திய அரசு அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுக்க ஒத்துழைத்ததாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அமெரிக்க நீதித்துறை தகவலின்படி, கௌதம் அதானி மற்றும் ஏழு மூத்த வணிக நிர்வாகிகள் சூரிய ஆற்றல் ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கு 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த ஒப்பந்தங்கள் சுமார் 20 ஆண்டு காலத்தில் வரிக்குப் பிறகு 2 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான இலாபத்தை ஈட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
குறித்த குற்றச்சாட்டுகளுக்கு அதானி குழுமம் இன்னும் பதிலளிக்கவில்லை.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் வியாழன் அன்று இந்தியாவின் முக்கிய பங்குச் சந்தைகள் சரிவினை கண்டன.
குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் 22.3 சதவீதம் சரிந்தது, அதானி போர்ட்ஸ் 20 சதவீதம் சரிந்தது.
ஏனைய குழு பங்குகள் 8.5 சதவீதம் மற்றும் 20 சதவீதம் சரிந்தன, குழு நிறுவனங்கள் ஆரம்ப வர்த்தகத்தில் ஒருங்கிணைந்த சந்தை மதிப்பில் சுமார் $22 பில்லியனை இழந்தன.
ஆரம்ப ஆசிய வர்த்தகத்தில் அதானி நிறுவனங்களின் டொலர் பத்திரங்களின் விலை கடுமையாக வீழ்ச்சியடைய தூண்டிய செய்தி, ஏனைய துறைகளையும் பாதித்தது.
13 முக்கிய துறைகளில் 11 நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்தன, அரசுக்கு சொந்தமான கடன் வழங்குநர்கள் 3.6 சதவீதம் வீழ்ச்சியை கண்டனர்.