இலங்கை – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியானது இன்று ஆரம்பமாகவுள்ளது.
இந்தப் போட்டியானது இலங்கை நேரப்படி பிற்பகல் 01.00 மணிக்கு டர்பனில் ஆரம்பமாகவுள்ளது.
இரு அணிகளும் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் லோர்ட்ஸில் நடைபெறும் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவதை நோக்கமாகக் கொண்டு இந்த தொடரில் களம் காணுகின்றன.
கடந்த மாதம் பங்களாதேஷுடனான டெஸ்ட் போட்டியில் ஆதிக்கத்தை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்கா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
இலங்கை, பாகிஸ்தானுக்கு எதிரான மீதமுள்ள நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு தொடரும்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தரவரிசையில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக தொடர் மூன்று வெற்றிகளுக்கு பின்னர் இலங்கை மூன்றாவது இடத்தில் உள்ளது.
எஞ்சியுள்ள நான்கு போட்டிகள் மூன்றில் வெற்றி பெற்றால் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான நம்பிக்கையை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும்.
தென்னாப்பிரிக்காவுடனான டெஸ்ட் தொடருக்கு பின்னர் இலங்கை உள்ளூரில் அவுஸ்திரேலியாவுடன் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும்.
தென்னாப்பிரிக்காவும் இலங்கையும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 31 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன, இதில் இலங்கை 9 வெற்றிகளையும், தென்னாப்பிரிக்கா 16 வெற்றிகளையும் பெற்றுள்ளன.
ஆறு போட்டிகள் சமனிலையில் முடிந்தன.
சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவின் ஆதிக்கம் என்பது தெளிவாக உள்ளது. அவர்கள் அங்கு இலங்கையுடன் விளையாடிய 17 போட்டிகளில் 14 வெற்றிகளை பெற்றுள்ளனர்.
அதே நேரத்தில் இலங்கை 3 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது.