நியூஸிலாந்துக்கு எதிரான இங்கிலாந்தின் வெற்றி மற்றும் இலங்கைக்கு எதிரான தென்னாப்பிரிக்காவின் வெற்றிகளைத் தொடர்ந்து அண்மைய ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
அண்மைய ஐசிசி ஆடவர் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர் தரவரிசையில் இங்கிலாந்து நட்சத்திரம் ஹாரி புரூக் நல்ல இடத்தைப் பெற்ற பின்னர், உலகின் சிறந்த டெஸ்ட் துடுப்பாட்ட வீரரான ஜோ ரூட்டுக்கு மிகப்பெரிய சவாலாக மாறினார்.
கிறிஸ்ட்சர்ச்சில் நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் இன்னிங்சில் 171 ஓட்டங்களை எடுத்த போது புரூக் தனது ஏழாவது டெஸ்ட் சதத்தை அடித்தார்.
மேலும், டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான அண்மைய தரவரிசையில் இரண்டு இடங்கள் முன்னேறி இரண்டாவது இடத்துக்கு வந்தார்.
அதே, இன்னிங்ஸில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் ஜோ ரூட், டக்கவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
இதன்மூலம், இங்கிலாந்தின் மூத்த துடுப்பாட்ட வீரருக்கும் ப்ரூக்கிற்குமான இடைவெளியை வெறும் 41 ரேட்டிங் புள்ளிகள் வித்தியாசமே உள்ளது.
தற்சமயம் ரூட் 895 புள்ளிகளுடன் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார், ப்ரூக் 854 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
ப்ரூக்கின் எழுச்சியால் இந்திய இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசையில் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
அதேநேரத்தில், நியூஸிலாந்துக்கு எதிரான வலுவான வெற்றியின் பின்னர், இங்கிலாந்து ஜோடியான ஒல்லி போப் எட்டு இடங்கள் முன்னேறி 32 ஆவது இடத்திற்கும் மற்றும் அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ் ஏழு இடங்கள் முன்னேறி 34 ஆவது இடத்தையும் பிடித்தனர்.
இதேவேளை, தென்னாப்பிரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான முதல் டெஸ்ட் நிறைவத் தொடர்ந்து டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் முதல் 10 இடங்களுக்குள் மேலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
டர்பன் போட்டியின் முடிவில் கமிந்து மெண்டிஸ் மற்றும் டெம்பா பவுமா இருவரும் தொழில் வாழ்க்கையில் உயர்ந்த மதிப்பீடுகளை அடைந்தனர்.
தென்னாப்பிரிக்காவின் 233 ஓட்டங்கள் வெற்றியுடன் இரு இன்னிங்ஸுகளிலும் அணித் தலைவர் பவுமா 70 மற்றும் 113 ஓட்டங்களை பெற்றார்.
இதனால், அவர் தரவரிசையில் 14 இடங்கள் முன்னேறி 10 ஆவது இடத்தை பிடித்தார்.
அதேநேரம், தினேஷ் சண்டிமால் இரண்டு இடங்கள் முன்னேறி 17 ஆவது இடத்திற்கும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 29 இடங்கள் முன்னேறி 42 ஆவது இடத்துக்கும் முன்னேறினர்.
இலங்கையுடனான முதல் போட்டியில் இரு இன்னிங்ஸ்களிலும் தென்னாப்பிரிக்க நட்சத்திரம் மார்கோ ஜான்சன் 11 விக்கெட்டுகளை எடுத்தார்.
முதல் இன்னிங்ஸில் 7/13 என்ற ஒரு சிறந்த பந்து வீச்சையும், இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும் அவர் எடுத்தார்.
இதனால் இடது கை வேகப் பந்து வீச்சாளர், டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் ஒட்டுமொத்தமாக 19 இடங்கள் முன்னேறி ஒன்பதாவது இடத்தை பிடித்தார்.
டெஸ்ட் சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையிலும் அவர் 10 இடங்கள் முன்னேறி இந்தியாவின் ரவீந்திர ஜடேஜாவுக்கு பின்னர் இரண்டாவது இடத்தை பிடித்தார்.
அதேநேரம், இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் விஷ்வா பெர்னாண்டோ நான்கு இடங்கள் முன்னேறி 29 ஆவது இடத்தை பிடித்து தரவரிசையில் பெரிய முன்னேற்றம் கண்டார்.
அதே சமயம் இங்கிலாந்து ஜோடியான பிரைடன் கார்ஸ் 21 இடங்கள் முன்னேறி 43 ஆவது இடத்தையும், ஷோயப் பஷீர் நான்கு ரன்கள் முன்னேறி 48 ஆவது இடத்துக்கும் முன்னேறினார்.