வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த 16 ஆம் திகதி முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக, நாட்டின் பிரதான மற்றும் மத்திய நீர்த்தேக்கங்கள் பலவற்றின் வான்கதவுகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் 73 பிரதான நீர்த்தேக்கங்களில் 31 நீர்த்தேக்கங்கள் ஏற்கனவே நீர் நிரம்பியுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தீவின் பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவின்படி, அம்பாறை மாவட்டத்தில் 72%, அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் 90%, காலி, கண்டி, புத்தளம் மாவட்டங்களில் 98%, மொனராகலை, பொலன்னறுவை மற்றும் மன்னார் மாவட்டங்களில் 80%, பதுளை மாவட்டம் 68%, மட்டக்களப்பு மாவட்டம் 63%, திருகோணமலை மாவட்டம் 76% என திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டின் பிரதான நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் கொள்ளளவு 80.2% ஆக உயர்ந்துள்ளது.
எனவே, நீர்த்தேக்கங்களைச் சூழவுள்ள தாழ்நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையங்கள் தொடர்ச்சியாக வெளியிடும் அறிவிப்புகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.