எல்லைப் பாதுகாப்பிற்காக கனடா அரசாங்கம் திங்களன்று (17) 1.3 பில்லியன் கனேடிய டொலர்களை ($913.05 மில்லியன்) முன்மொழிந்தது.
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவிற்குள் குடியேறுபவர்கள், போதைப் பொருட்களின் நடமாட்டத்தை கனடா குறைக்காத பட்சத்தில், வரி விதிக்கப்படும் என அச்சுறுத்தியதை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.
முன்னதாக ட்ரம்ப், கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 25% வரி விதிக்கப்படும் என அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
இத்தகைய கட்டணங்கள் கனடாவின் பொருளாதாரத்திற்கு அடியாக அமையும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந் நிலையில் செவ்வாயன்று, இந்தத் திட்டத்தின் விவரங்களை அறிவித்த கனடாவின் நிதி மற்றும் அரசுகளுக்கிடையேயான விவகாரங்களுக்கான அமைச்சர் டொமினிக் லெப்லாங்க் (Dominic LeBlanc), மத்திய அரசாங்கம் எல்லைப் பாதுகாப்பு அதிகரிப்புக்கு $1.3 பில்லியன் நிதியை ஒதுக்கும் என்றார்.
இந்த நடவடிக்கைகள் “சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் ஒழுங்கற்ற குடியேற்றத்திற்கு எதிராக நமது எல்லையைப் பாதுகாக்கும் என்றார்.
கனேடிய மத்திய அரசு எல்லைப் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு ஐந்து தூண்கள் கொண்ட அணுகுமுறையை வகுத்துள்ளது.
அவற்றில் ஃபெண்டானில் வர்த்தகத்தின் இடையூறு, சட்ட அமலாக்கத்திற்கான புதிய கருவிகள், அமெரிக்க சட்ட அமலாக்கத்துடன் மேம்பட்ட ஒருங்கிணைப்பு, அதிகரித்த தகவல் பகிர்வு மற்றும் எல்லையில் போக்குவரத்தை கட்டுப்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியது.
(ஃபென்டானில் (Fentanyl) என்பது ஒரு செயற்கை ஓபியாய்டு ஓபியாய்டு வலி நிவாரணி)