தேசிய மட்ட இளையோருக்கான குத்துச்சண்டை போட்டியில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவன் T.தரனிதரன் வெள்ளிப்பதக்கத்தை பெற்றுக்கொண்டுள்ளான்.
இளையோருக்கான இவ் குத்துச்சண்டை போட்டியானது , 18,19 மற்றும் 20 ஆம் திகதிகளில் கண்டியில் நடைபெற்றது. இதன்போது 69 – 71 kg எடைப்பிரிவில் போட்டியிட்ட இம் மாணவன் இறுதிப்போட்டியில் கண்டி சென் சில்வஸ்ரார்ஸ் கல்லூரி மாணவனை எதிர்கொண்டு இரண்டாம் இடத்தினைப்பெற்று வெள்ளிப்பதக்கத்தை பெற்றுக்கொண்டான்.
இப் போட்டியில் கண்டி வித்தியார்த்த கல்லூரி மாணவனுடன் தெரிவு போட்டியில் வெற்றியீட்டி அரையிறுதிபோட்டிக்கு தெரிவாகிய தரனிதரன் அரை இறுதிப்போட்டியில் ,கொழும்பு ரோயல் கல்லூரி மாணவனுடன் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தெரிவாகியிருந்தார்.
இம்மாணவனுக்கான முழுமையான பயிற்சியினையும் வழிகாட்டலினையும் குத்துச்சண்டையின் வடமாகாண தலைமை பயிற்றுவிப்பாளர் எம்.நிக்சன் வழங்கியிருந்தார்.
இவரது முழுமையான வழிகாட்டலில் வெற்றி பெற்ற இம் மாணவன் வவுனியா மாவட்டத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.