இந்த வருடம் இலங்கைக்கு வருகை தரும் இரண்டு மில்லியன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை வரவேற்க இன்று (26) தயாராகியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் (SLTPB) இன்று காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) விசேட நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க தெரிவித்தார்.
அத்துடன் டிசம்பர் 22 ஆம் தேதி வரை, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 1,966,256 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
டிசம்பரில் மட்டும், 161,383 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர், இந்தியாவில் இருந்து வந்த மிகப்பெரிய குழு மொத்த எண்ணிக்கை 35,131 ஆகும்.
மேலும், ரஷ்யாவிலிருந்து 22,637 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், இங்கிலாந்திலிருந்து 12,822 பேரும், ஜெர்மனியில் இருந்து 9,998 பேரும், அவுஸ்திரேலியாவிலிருந்து 8,646 பேரும் டிசம்பர் மாதத்தில் இலங்கைக்கு வந்துள்ளனர்.
மேலும் இந்த ஆண்டு (2024) கடந்த நிலையில், அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், 399,224 பேர் இந்தியாவிலிருந்து வந்ததாகவும், ரஷ்யாவிலிருந்து 189,289 சுற்றுலாப் பயணிகள் வந்ததாகவும் சுற்றுலா வளர்ச்சி வாரியம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்த ஆண்டு இதுவரை இங்கிலாந்தில் இருந்து 172,404 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியில் இருந்து 131,379 பேரும், சீனாவில் இருந்து 120,268 பேரும், பிரான்சில் இருந்து 86,440 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.
2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் இலங்கையில் சுமார் 2.1 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக பேராசிரியர் ரணசிங்க மேலும் குறிப்பிட்டார்.