இந்தியாவில் வாழும் 140 கோடி மக்களில் 90 சதவீதம் பேர், அதவாது சுமார் 100 கோடி மக்கள் அத்தியாவசிய செலவுகளைத் தவிர வேறு எதையும் வாங்க பணம் இல்லாத சூழ்நிலையில் உள்ளனர் என்று அதிர்ச்சி அறிக்கை வெளியாகி உள்ளது.
ப்ளும் வெண்ட்சர்ஸ் (Blume Ventures) எனும் முதலீட்டு` நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், இந்தியாவின் 140 கோடி மொத்த மக்கள் தொகையில் வெறும் 14 கோடி மக்கள் மட்டுமே சந்தையில் பங்களிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் நுகர்வோர்களாக இருக்கும் 30 கோடி மக்கள் பெரும் தயக்கத்துடனேயே செலவு செய்கின்றனர். ஏறத்தாழ 100 கோடி மக்கள் அத்தியாவசிய செலவுகளைத் தவிர வேறு எதையும் வாங்க பணம் இல்லாத சூழலில் உள்ளனர்.
இந்தியாவில் ஏற்கனவே உள்ள பணக்காரர்களின் செல்வம் அதிகரித்து வருவதைப் போல பணக்காரர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கவில்லை என்பதை இந்த அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.
இதன் பொருள் ஏழைகள் வாங்கும் சக்தியை இழந்து வரும் வேலையில் ஏற்கனவே பணக்காரர்களாக இருப்பவர்கள் மேலும் பணக்காரர்களாகி வருகிறார்கள். ஆனால் புதிய பணக்காரர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இல்லை.
இந்த நுகர்வுத் திறனில் ஏற்பட்டுள்ள சரிவுக்கு, மக்களிடம் கடன் சுமை அதிகரித்து வருவதும், நிதி சேமிப்பு குறைந்திருப்பதும் முக்கியக் காரணம் என்கிறது ப்ளும் வெண்ட்சர்ஸ் ஆய்வறிக்கை. இந்திய ரிசர்வ் வங்கியை மேற்கோள் காட்டி, `இந்தியக் குடும்பங்களின் நிகர சேமிப்பு கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியை சந்திதுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
1990 ஆம் ஆண்டில், இந்தியாவின் 10 சதவீத மேல்தட்டு மக்கள் தேசிய வருமானத்தில் 34 சதவீதத்தை வைத்திருந்தனர். இன்று அதே 10 சதவீத மக்கள் தேசிய வருமானத்தில் 57.7 சதவீதத்திற்கு அதிபதிகளாக உள்ளனர்.
அதேசமயம், நாட்டின் ஏழ்மையான 50 சதவீத மக்களின் வருமானம் 22.2 சதவீதத்திலிருந்து வெறும் 15 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதாவது பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மேலும் ஏழைகளாவும் மாறியுள்ளனர்.
பணவீக்கத்தால் நடுத்தர வர்க்கத்தினரின் சம்பளத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு எதுவும் ஏற்படவில்லை. கடந்த பத்து ஆண்டுகளில், வரி செலுத்தும் நடுத்தர வர்க்கத்தினரின் வருமானம் கிட்டத்தட்ட தேக்க நிலையில் உள்ளது, அதாவது அவர்களின் சம்பளம் பாதியாகக் குறைந்துள்ளது.
நடுத்தர வர்க்கத்தினரின் சேமிப்பு கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த மட்டத்தில் உள்ளது. மக்களின் தேவைகள் அதிகரித்து வருகின்றன.ஆனால் வருமானம் அப்படியே உள்ளது. இந்தியாவின் நுகர்வோர் தேவைக்கான உந்து சக்தியாக விளங்கும் நடுத்த வர்க்கத்தினர் நசுக்கப்பட்டு வருவதாகத் ப்ளும் வெண்ப்ட்சர்ஸ் ஆய்வறிக்கை நிறுவியுள்ளது.