தமிழ்-சிங்களப் புத்தாண்டுக்காக சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்காக இன்று (11) முதல் விசேட ரயில் சேவைகள் இயக்கப்படும் என்று இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்காக 10 சிறப்பு ரயில்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக ஜெயசுந்தர தெரிவித்தார்.
அதன்படி, கொழும்பிலிருந்து பதுளை, காலி, பெலியத்த, அனுராதபுரம் மற்றும் காங்கேசன்துறை ஆகிய இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
இந்த 10 சிறப்பு ரயில்களும் புத்தாண்டு பருவம் மற்றும் நீண்ட வார இறுதி விடுமுறை நாட்களில் 31 பயணங்களை மேற்கொள்ளும் என்று ரயில்வே பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.
பொது மக்கள் ரயில்வே திணைக்களத்தின் வலைத்தளம் வழியாக ஆசனங்களை முன்பதிவு செய்ய முடியும்.
இதற்கிடையில், கிராமப்புறங்களுக்கு பயணிக்கும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான பேருந்துகளை இன்று இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் சேவை மேற்பார்வை இயக்குநர் திருமதி ஷெரீன் அதுக்கோரல குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.