2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியானது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியை எதிர்கொள்ளவுள்ளது.
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 25 ஆவது போட்டியான இந்த ஆட்டம் இன்றிரவு 07.30 மணிக்கு சென்னை, எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
CSK தற்போது புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்திலும், KKR புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்திலும் உள்ளன.
போட்டிக்கு முந்தைய நாள், முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியின் தலைவர் ருதுராஜ் கெய்க்வாட் இந்தப் போட்டியில் இருந்து விலகுவதாகத் CSK தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் உறுதிபடுத்தினார்.
28 வயதான கெய்க்வாட்டின் முழங்கை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதை எம்.ஆர்.ஐ. பரிசோதனைகள் உறுதிப்படுத்தியது.
இந்த நிலையில் நடப்பு ஐ.பி.எல். தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளுக்கு மூத்த வீரர் எம்.எஸ்.தேனி தலைவராக பெறுப்பேற்பார் என்றும் ஸ்டீபன் பிளெமிங் கூறியுள்ளார்.
அந்த அறிவிப்புக்கு அமைவாக CSK அணியானது இன்று தோனி தலைமையில் மீண்டும் களமிறங்குகின்றது.
43 வயதான தோனி, 2008 முதல் 2024 வரை சென்னை அணியை வழிநடத்தினார்.
கடந்த சீசனில் அவர் கெய்க்வாட்டிடம் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்தார்.
2022 ஆம் ஆண்டில் ரவீந்திர ஜடேஜாவிடம் தலைமைப் பொறுப்பையும் ஒப்படைத்தார், ஆனால் தொடர்ச்சியான ஏமாற்றமளிக்கும் முடிவுகளுக்குப் பின்னர் சீசனின் நடுவில் மீண்டும் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
தோனியின் தலைமையின் கீழ் CSK ஐந்து ஐ.பி.எல். பட்டங்களை வென்றுள்ளது.
மறுபுறம், மூன்று நாட்களுக்கு முன்பு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான குறுகிய தோல்வியிலிருந்து KKR அணி இந்த ஆட்டத்தில் மீண்டு வர முயற்சிக்கும்.
ஐ.பி.எல். வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 30 போட்டிகளில் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளன.
அதில் CSK அணியானது 19 வெற்றிகளையும், KKR அணியானது 10 வெற்றிகளையும் பெற்றுள்ளன.
ஒரு போட்டி எந்தவித முடிவின்றியும் கைவிடப்பட்டுள்ளது.