மத்திய கிழக்கு நாடுகளுக்கு மூன்று நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்தியா வொஷிங்டனுக்கு “சுங்க வரிகள் இல்லாத” வர்த்தக ஒப்பந்தத்தை வழங்கியதாக வியாழக்கிழமை (15) கூறினார்.
கட்டாரில் வணிகத் தலைவர்களுடனான ஒரு நிகழ்வில் பேசிய ட்ரம்ப், இந்திய அரசாங்கம் “எங்களிடம் எந்த வரியும் வசூலிக்கத் தயாராக இல்லாத ஒரு ஒப்பந்தத்தை எங்களுக்கு வழங்கியுள்ளது” என்று கூறியதாக அமெரிக்க ஜனாதிபதியின் கருத்துக்களை மேற்கொள்காட்டி ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், இந்தியாவின் வெளிப்படையான சலுகை குறித்து ட்ரம்ப் எந்த மேலதிக விவரங்களையும் வழங்கவில்லை.
அதேநேரம், அவரது அறிக்கைக்கு மத்திய அரசு இன்னும் பதிலளிக்கவில்லை.
மேலதிகமாக ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்குடன் பேசியதாகவும், இந்தியாவில் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதை அவர் ஊக்கப்படுத்தியதாகவும் ட்ரம்ப் கூறினார்.
அமெரிக்க ஜனாதிபதியின் வரிகள் குறித்த கருத்துக்கள், பரஸ்பர வரிகளை 90 நாள் இடைநிறுத்தத்திற்குள் வொஷிங்டனுடன் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்த புது டெல்லி தொடர்ந்து முயற்சித்து வரும் பின்னணியில் வந்துள்ளன.
ட்ரம்ப் தனது ஏப்ரல் 9 ‘விடுதலை நாள்’ அறிவிப்புகளின் போது இந்தியா மீது 26 சதவீத வரியை விதித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



















