அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரர் கிளென் மேக்ஸ்வெல் (Glenn Maxwell) சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று (02) அறிவித்தார்.
2012 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அறிமுகமான 36 வயதான மேக்ஸ்வெல் அவுஸ்திரேலியாவுக்காக 149 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 33.81 சராசரியாகவும், 126.70 ஸ்ட்ரைக் ரேட்டுடனும் 3,990 ஓட்டங்களை எடுத்துள்ளார்.
அத்துடன், தனது திறமையான சுழற் பந்து வீச்சு மூலமாக ஒருநாள் அரங்கில் 77 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியதுடன், 91 பிடியெடுப்புகளையும் மேற்கொண்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் 2015 மற்றும் 2023 ஒருநாள் உலகக் கிண்ண வெற்றிகளில் மேக்ஸ்வெல் முக்கிய பங்கு வகித்தார்.
2023 ஆம் ஆண்டில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றிபெறும் சேஸிங்கில் கடுமையான வலியுடன் போராடி ஆட்டமிழக்காமல் 201 ஓட்டங்களை எடுத்ததன் மூலம், தனது தொழில் வாழ்க்கையில் மிகச் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார்.