AI-171 ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான விசாரணையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, இந்தியாவின் விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) விமானத்தின் முன்பக்க கருப்புப் பெட்டியிலிருந்து முக்கியமான தரவுகளை வெற்றிகரமாக மீட்டெடுத்து பதிவிறக்கம் செய்துள்ளது.
இந்த தகவலை இந்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு இன்று (25) பிற்பகல் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதேநேரம், இந்த முயற்சிகள் விபத்துக்கு வழிவகுத்த நிகழ்வுகளின் வரிசையை மறுகட்டமைத்தல், விமானப் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் எதிர்கால நிகழ்வுகளைத் தடுப்பதற்கான பங்களிக்கும் காரணிகளைக் கண்டறிதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளன.
விமானத் தரவுப் பதிவுக் கருவி (FDR) மற்றும் கொக்பிட் குரல் பதிவுக் கருவி (CVR) உள்ளிட்ட கருப்புப் பெட்டிகள் விபத்தில் சேதமடைந்ததால், தரவுகளை மீட்டெடுக்க முடியுமா என்ற கவலை எழுந்தது.
ஆரம்பத்தில், தடயவியல் தரவு பிரித்தெடுப்பதற்காக அரசாங்கம் இந்த சாதனங்களை இந்தியாவிற்கு வெளியே அனுப்பக்கூடும் என்று தகவல்கள் தெரிவித்தன.
இருப்பினும், விமான விபத்து புலனாய்வுப் பணியகம் தற்போது விமான்தின் விபத்து பாதுகாப்பு தொகுதி (CPM) மற்றும் நினைவக அலகிலிருந்து தரவை வெற்றிகரமாக மீட்டெடுத்து பிரித்தெடுத்துள்ளது.
இது 275 நபர்களின் உயிர்களை காவு கொண்ட விமான விபத்துக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடிப்பதில் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது.



















