தனுஷ், இயக்கி நடித்திருக்கும் திரைப் படம் இட்லி கடை . இத் திரைப்படம் நேற்றைய தினம் (01) திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தில் நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன், சமுத்திரக்கனி என பலரும் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஆகாஷ் பாஸ்கரன் இப்படத்தை தயாரித்துள்ளார்.
தலைப்புக்கு ஏற்ப ஒரு சின்ன இட்லி கடையை சுற்றியே இக் கதை நகர்கின்றது. தேனி மாவட்டம் சங்கராபுரம் கிராமத்தில் ஒரு ஓட்டல் நடத்துகிறார் ராஜ்கிரண்.
அந்த ஓட்டலின் இட்லி சுவையை ஊரே கொண்டாடுகிறது. அவர் மகனான தனுஷ் வளர்ந்தவுடன் செப் ஆகி, பாங்காக்கில் பணிபுரிகின்றார். அவர் வேலை பார்க்கும் தொழிலதிபர் மகள் ஷாலிணி பாண்டே, தனுசை காதலிக்க, அவர் அண்ணன் அருண்விஜய் எதிர்க்க, அதையும் மீறி தனுஷ், ஷாலிணிபாண்டே திருமணம் நடக்க இருக்கிறது.

அதற்குள் சூழ்நிலை காரணமாக சொந்த ஊர் வருகிறார் தனுஷ். அப்பாவின் ஓட்டலை எடுத்து நடத்துகிறார். அதில் ஏகப்பட்ட பிரச்னைகள். அதற்குள் தங்கை திருமணம் நின்றதால் பாங்காக்கில் இருந்து வில்லன் அருண்விஜயும் வந்து தனுசுக்கு குடைச்சல் கொடுக்க, தடைகளை மீறி அப்பா மாதிரி இட்லிகடை நடத்தினாரா தனுஷ்.
அவருக்கும், ஊரில் இருக்கும் நித்யாமேனனுக்கும் திருமணம் நடந்ததா? அருண்விஜய் திருந்தினாரா என்பதுதான் இட்லிகடை திரைப்படத்தின் கரு. நடிகராக பல இடங்களில் தனி முத்திரை பதித்து இருக்கிறார் தனுஷ். ஆரம்பத்தில் சில காட்சிகளில் கல்லுாரி மாணவராக வருகிறார். பின்னர், பாங்காக் ஓட்டலில் கோட், சூட் என ரிச் ஆக இருக்கிறார்.
ஊருக்கு வந்தவுடன் நெற்றியில் பட்டை, வேட்டி, சட்டை, துண்டு என கிராமத்தானாக மாறி நல்ல நடிப்பை தருகிறார். அதேபோல் நித்யா மேனனும் இயல்பான கிராமத்து பெண்ணாக சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
தொழில் பக்தி, குடும்ப பாசம், ஊர்ப்பாசம் ஆகியவற்றை அழுத்தமாக இத் திரைக் கதை எடுத்துக் காட்டுகிறது. ஜி.வி.பிரகாஷ் இசை, கிரண்வுகவுசிக் ஒளிப்பதிவு, ராஜ்கிரண் உருக்கமான நடிப்பு ஆகியவை படத்தின் பலமாகின்றன.
இடைவேளைக்குப் பிறகு கதை சற்று மெதுவாக நகர்வது போல் தோன்றும் . மேலும் சில காட்சிகள் இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம் என்ற எண்ணத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியது என்றே கூறலாம். எவ்வாறு இருப்பினும் குடும்பத்துடன் பார்க்கத்தக்க படமாக இட்லிகடை அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




















