இந்தியாவின் பெரிய கங்கை நதி அமைப்பைப் போலவே, ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் செவ்வாய் கிரகத்தில் உள்ள பெரிய நதி அமைப்புகளை வரைபடமாக்கி, கிரகத்தின் பண்டைய நீர் வலையமைப்புகள் பற்றிய புதிய நுண்ணறிவை வழங்கியுள்ளனர்.
அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமியின் ஆய்விதழில் (PNAS) வெளியிடப்பட்ட அவர்களின் புதிய ஆய்வு, 16 முக்கிய நதிப் படுகைகளைக் கண்டறிந்து கோடிட்டுக் காட்டுகிறது.

இது செவ்வாய் கிரகத்தின் பெரிய அளவிலான வடிகால் அமைப்புகளின் முதல் விரிவான வரைபடமாகும்.
இந்த கண்டுபிடிப்புகள் கிரகத்தில், ஒரு காலத்தில் உயிரினங்கள் அதிகமாக இருந்திருக்கக்கூடிய பகுதிகளை எடுத்துக்காட்டுகின்றன.
மேலும் அவை, சிவப்பு கிரகத்தில் வாழக்கூடிய தன்மைக்கான ஆதாரங்களைத் தேடும் எதிர்காலப் பணிகளுக்கு வழிகாட்டுகின்றன.
பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, மழைப்பொழிவு செவ்வாய் கிரகத்தின் குறுக்கே பள்ளத்தாக்குகளையும் ஆறுகளையும் உருவாக்கியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த நீர் அமைப்புகள் பூமியில் பெரும்பாலும் அமேசான் நதிப் படுகை போன்ற வளமான பல்லுயிர் பெருக்கத்திற்கு தாயகமாக இருக்கும் சூழல்களை உருவாக்கியது.
செவ்வாய் கிரகத்தில் இதேபோன்ற பெரிய வடிகால் அமைப்புகள் செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கான தொட்டில்களாக செயல்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
















