வெஸ்டன்-சூப்பர்-மேரில் ஒன்பது வயது சிறுமியான ஆரியா தோர்ப்பைக் (Aria Thorpe) கொலை செய்த சந்தேகத்தின் பேரில் 15 வயது சிறுவன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக இங்கிலாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வயது வரம்பு காரணமாக பெயர் குறிப்பிடப்படாத அந்த சிறுவன் இன்று (17) பிரிஸ்டல் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையினை ஏவான் மற்றும் சோமர்செட் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
உளளூர் நேரப்படி, திங்கட்கிழமை மாலை 6:00 மணியளவில் வெஸ்டன்-சூப்பர்-மேரில் உள்ள லைம் க்ளோஸில் அமைந்துள்ள ஒரு வீட்டில் ஆரியா உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இதையடுத்து சிறிது நேரத்திலேயே குறித்த சிறுவன் வோர்லில்
கைது செய்யப்பட்டான்.
ஆரியாவின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனையில் அவரது மரணத்திற்கான முதற்கட்ட காரணம் கத்திக் குத்துக் காயம் என்று கண்டறியப்பட்டது என்று ஏவான் மற்றும் சோமர்செட் பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு வாரங்களுக்கு முன்புதான் ஆரியா தனது ஒன்பதாவது பிறந்தநாளை விருந்துடன் கொண்டாடியதாகவும், அவர் இறப்பதற்கு முந்தைய இரவு, நெருங்கிய நண்பர்களுடன் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் தொடர்பில் உற்சாகத்துடன் கலந்தலோசித்ததாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.














