பிரஸ்ஸல்ஸில் வியாழக்கிழமை (18) இரவு முழுவதும் நீடித்த பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், அவசர நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உக்ரேனுக்கு 90 பில்லியன் யூரோ அதாவது 105 பில்லியன் அமெரிக்க டொலர் வட்டியில்லா கடனை வழங்க ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் ஒப்புக் கொண்டனர்.
போரினால் பாதிக்கப்பட்ட நாட்டின் இராணுவ மற்றும் பொருளாதாரத் தேவைகளை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்தக் கடன் பூர்த்தி செய்யும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா தெரிவித்தார்.
கடன் எவ்வாறு நிதியளிக்கப்படும் என்பதை ஐரோப்பிய தலைவர்கள் உடனடியாக தெளிவுபடுத்தபவில்லை.
ஆனால், ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் படையெடுப்பால் ஏற்பட்ட சேதத்திற்கு ரஷ்யா இழப்பீடு வழங்கும் வரை உக்ரேன் பணத்தை திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் குறிப்பிட்டார்.
போருக்குப் பின்னர் மொஸ்கோ உக்ரேனுக்கான இழப்பீடுகளை செலுத்த மறுத்தால், முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களில் 200 பில்லியன் யூரோவை கடனை ஈடுகட்ட பயன்படுத்தவும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களின் கூட்டத்தில் இணக்கப்பாடு எட்டப்பட்டது.




















